புதியவை

Friday, May 26, 2017

அவளின் நினைவாக.......!


சல...சல...வென்று ஓசை எழுப்பிக் கொண்டு பாம்பு போல் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருக்கும் அந்த அழகிய மாணிக்க கங்கையின் அருகிலிருந்த ஒரு மருதமர நிழலின் கீழ் உட்கார்ந்தபடி இயற்கையின் எழில் மிகு காட்சிகளை என் கண்கள் ரசித்துக்கொண்டிருந்தாலும் சிதைந்து போன என்னிதயமோ நடந்து முடிந்து விட்ட எனது சோக வாழ்வை அசை போடத் தொடங்கியது.

ஆம்! உலகில் எந்தமூலையில் நான் வாழ்ந்தாலும் இந்தத் திகதியில் என் கதிா்காமக் கந்தனிடம் வந்து அவரை வணங்கிச் செல்வது எனது வழமையான செயலாகியிருந்தது. இன்றுடன் முப்பதாவது வருடமாக முருகனிடம் வந்து சீரழிந்து போன  என் வாழ்க்கையை நினைவு கூா்ந்து என்னைப் போல் ஒரு பரிதாப நிலை வாழ்வில் எவருக்குமே எற்படாது மக்களைக் காக்குமாறு முருகனிடம் மன்றாடும் நாளாகும். ஒரு வாரம் கதிர்காமக் கந்தனை வழிபட்டு விட்டும் மீண்டும் அவுஸ்திரேலியா திரும்புவேன். இது வருடம் தவறாமல் நடக்கும் ஒரு வழமையான நிகழ்வாகும்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு இருபத்தைந்து வயது. தாய்இ தந்தை இருவரையும் இளமையிலேயே இழந்து விட்ட நான் எனது பொரியம்மாவின் அன்பான கவனிப்பால் வளர்ந்து படித்து நல்ல பதவியிலும் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் பணி புரியும் அலுவலகத்தில் பணிபுரிந்தாள் மாலதி! நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் மாலதி அழகில் சற்றுமிகையாகவே இருந்தாள். எல்லோருடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பேசி வலம்வந்த அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போதுநேரடியாகவே மாலதியிடம் என் விருப்பை வெளிப்படுத்தினேன். அவளும் எதுவித மறுப்பும் கூறாமல் சம்மதமும் தந்தாள். மாதங்கள் பல கடந்தன.....எங்கள் ......நட்பும் தொடர்ந்தது. பல இடங்களில் தனிமையில் சந்தித்ததுப் பேசுவோம். அவள் மெதுவாகப்பேசித் தன் பெற்றொருக்கும் எமது தொடா்பை வெளிப்படுத்தினாள். ஐந்து வருடங்கள் கடந்தன.

மாலதியின் குடும்பத்தார் எமக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருந்தனர். நானும் மாலதியும் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து நேராக அவளது வீட்டுக்கு வந்து அவளின் பெற்றோருடன் பேசி திருமண நாளை நிச்சயம் செய்தோம். எனது சார்பில் உறவுகள் பெரிதாக இல்லாத படியால் மாலதிக்கும், எனக்கும் நடைபெற இருக்கும் திருமணத்தை கதிர்காம முருகன் முன்பாகவே நடாத்த நான் விரும்பினேன் மாலதி வீட்டாரும் அதற்கு உடன்பட்டு நாளும் குறிக்கப்பட்டடது.

மாலதி குடும்பத்தாருடன் அவர்களின் உறவினர் சுமார் பத்துபேர்கள் ஒரு மினி பஸ்வண்டியிலும் நானும் எனது நண்பர் மூவரும் எனது அலுவலக ஜீப் வண்டியிலும் கதிா்காமம் புறப்பட்டோம்.

நாளை மறு நாள் திருமணம் ஒரு நாள் முன்னதாகவே சென்று கதிா்காமம் தங்குவதே எமது விருப்பம். மட்டக்களப்பிலிருந்து காலை 9.00 மணி அளவில் எமதுவாகனம் புறப்பட்டது. என்னுடன் வந்த எனது நண்பா்கள் மிகவும் சந்தோஷமாக பாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தனர்.

பாதையின் இருமருங்கிலும் பச்சைப் பசேலென்று வளர்ந்திருந்த பெரிய மரங்கைளையும், காடுகளையும் பார்த்து ரசித்துக்கொண்டு எனது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். மாலதி குடும்பத்தார் பயணம் செய்யும் பஸ் வண்டி எம்முன்னால் சுமார் இருபது மீட்டர் இடைவெளியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது தான் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப்பயங்கரம் சம்பவம் என் கண்முன்பாகவே நடந்தது.
ஆம்! மாலதி வீட்டார் சென்று கொண்டிருந்த மினிபஸ்அறுகம்பை என்ற இடத்தை கடக்கும் போதுஅந்த  ஆற்றின் மேலாகப்போடப்பட்டிருந்த பாலத்தின் தடுப்பு தூண்களை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இச் சம்பவம் எங்களை கதிகலங்க வைத்தது. அந்தப் பகுதி எங்கும் இச் செய்தி பரவியது.

விபத்து பற்றிய செய்தி அறிந்த பொலிசார், விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மாலதி வீட்டார் அனைவரையும் கரை சேர்த்து அவசர அவசரமாக  அருகிலிருந்த அரசமருத்துவ மனையில் சேர்த்தனர். மறுதான் மாலதி தவிர்ந்த அனைவரும் சிறு காயங்களுடன் வீட்டுக்கு அனுப்பப் பட்டனர்.

மாலதியின் நிலமை மட்டும் மிகவும் மோஷமாக இருப்பதாகவும் அவருக்கு விசேட சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த டாக்டர்கள் மாலதியை அந்தமாவட்டத்தின் பெரிய மருத்துவமனையான மட்டக்களப்பு மருத்துவ மனைக்கு மாலதியையும் உதவியாக என்னையும், அவள் பெற்றோரையும் அனுப்பி வைத்தனர்.

மாலதிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தனர். மாலதி இன்னும் மயக்க நிலையிலேயே இருந்தாள். செய்வதறியாது நானும் அவள் பெற்றோரும் வெளியில் அமர்ந்திருந்தோம்.
அப்போது ஒரு நேர்ஸ் வெளியில் வந்து உங்களில் யார் பாஸ்கர்உடனே உள்ளே வாருங்கள் என்று கூறிவிட்டு அவசரமாக உள்ளே போய் விட்டாள்.
மாலதி இருந்த அறைக்குள் சென்று அவளின் கட்டிலருகில் நான் நின்றேன், அவள் கண்மூடியே இருந்தது. மாலதி உங்களிடம் ஏதோ பேசவிரும்புகிறார். கூடிய சீக்கிரம் பேசிவிட்டு வெளியில் காத்திருங்கள் என்று கூறிவிட்டு நேர்ஸ் அறையை விட்டு வெளியேறினாள்.

தொடர்ந்தும் மாலதி கண் விளிக்காமலிருப்பதைக் கவனித்த நான் அவள் தோளில் மெதுவாக கையை வைத்து மாலதி! என்றேன்.
சிறிது நேரத்தின் பின் மெதுவாக கண் திறந்து என்னை மாலதி பார்த்தாள் அவாளால் எதுவுமே பேசமுடியவில்லை. அவளது வலது கை அவள் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது. வலிதாங்க முடியாமல்....மிகவும் கஷ்டப்பட்டாள். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்; வழிந்து கொண்டிருந்தது. அவளது செய்கை மூலம் அவள் மார்பில் பலத்த வலியிருப்பதை நான் உணர்ந்தேன்.

மீண்டும் மாலதி! அழவேண்டாம் நீங்கள் குணமாகி விடுவீர்கள் பயப்படவேண்டாம் என ஆறுதல் கூறினேன். அவளால் எதுவும் பேசமுடியவில்லை.
சற்றும் எதிர் பாராமல் எனது கை விரலைப் பிடித்த மாலதி தனது கைவிரலில் போட்டிருந்த ஓர்; மோதிரத்தைக் கழற்றி என் கைவிரலில் மாட்டினாள்.
மாலதியின் இச்செய்கை எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது இப்போ இதற்கு ஏன் அவசரம் மாலதி என்றேன்.
இல்லை பாஸ்கர் இப்போ நான் இதைச் செய்யாவிட்டால் என்றுமே செய்ய முடியாமல் போய்விடும் என்றாள். நான் இப்போது உங்களை எனது சொந்தமாக்கி விட்டேன்....இனி மேல் நான் இறந்தாலும் பறவாயில்லை. என்று கூறியவாறு என் முகத்தைப் பார்த்தாள் மாலதி. அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

இருவருக்குமே வார்த்தைகள் வரவில்லை. நானும் அழுதேன் மாலதியும் அழுதாள். இடையில் அழுகையை நிறுத்திய மாலதி பாஸ்கர் நான் பிழைப்பது கஷ்டம்! தயவு செய்து எனக்கு ஏதாவது நடந்தால் என்னையே நினைத்துக்கொண்டிருக்காமல் யாரையாவது திருமணம் செய்து சந்தோஷமாக வாழுங்கள்! முடிந்தால் உங்கள் முதல் குழந்தைக்கு எனது பேரை வையுங்கள்.....என்று மெல்லிய குரலில் பேசிக் கொண்டே போகும் போது எனது கரத்தைப் பற்றியிருந்த அவளது கைகள் மெல்ல மெல்ல விடுபடுவதையும், அவளது பேச்சுக் குரல் குறைந்து கொண்டு வருவதையும் கவனித்த நான் உடனே உரத்த குரலில் நேர்ஸ்சை அழைத்தேன். உடனே நேர்ஸ்சும்... டாக்டரும் ஓடி வந்தனர். மாலதியை பரிசோதித்தனர்........!

பரிசோதித்த டாக்டர்......பாஸ்கர் எங்களை மன்னிக்க வேண்டும். இனி மேல் எங்களால் எதுவுமே செய்ய முடியாது என கையை விரித்தார்
என்னால் இதைத் தாங்க முடியவில்லை, மாலதி ஏன் அம்மா இப்படிச் செய்தாய்! என்னையும் உன்னுடன் கூட்டிச் சென்றிருக்காலமே! என்னையும் உன்னுடன் கூட்டிச் சென்றிருக்கலாமே! அலறினேன்.... துடித்தேன் ! யாருமே உறவுகளில்லை என்று உன்னிடம் ஓடிவந்த என்னை உதறித் தள்ளி விட்டாயே மாலதி! கதறினேன் இதய பாரம் குறையும் மட்டும் அழுதேன். யார் என்ன ஆறுதல் கூறியும் மாலதியின் இழப்பு என்னை அழிக்கத் தொடங்கியது. செய்வதறியாமல் தடுமாறினேன். அவள் பிரிவு என்னை பைத்தியகாரனாக்கியது.

மூன்று மாதங்கள் கடந்தன் நான் அவூஸ்திரேலியாவிற்கு ஏற்கனவே செய்திருந்த   விஸா  விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான   பதிலும்  எனக்கு கிடைத்தது.
மாலதி நினைவு சற்று குறையலாம் என்ற எண்ணத்தில் அவுஸ்திரேலியா சென்றேன். நல்ல வேலையும் கிடைத்தது. கைநிறைய பணத்தையும், பதிவியையும் தந்த இறைவன் என் மாலதியை மட்டும்  என்னிடமிருந்து பறித்து விட்டானே அவளை என்னால் மறந்து வாழமுடியவில்லை..

அவளது இறந்த நாள் எப்போ வருகின்றதோ அதற்கு இரு வாரத்திற்கு முன்பே இலங்கைக்குப் போய் எமது நிச்சயித்த கல்யாண நாளன்று கதிர்காமக் கந்தனின் முன்னால் நின்று முருகா! அடுத்த பிறவியிலாவது என்னையும் மாலதியை ஒன்று சேர்த்து விடப்பா என்று கண்ணீர் விட்டு அழுவேன். ஆம்!அதுதான் இப்போ என்னால் செய்ய முடிந்தது.

எனது மாலதி என்னை விட்டுப் பிரிந்து இன்றுடன் முப்பது ஆண்டுகள் போய்விட்டன. நானும் முப்பதாவது தடவையாக கந்தனிடம் மாலதியையும் என்னையும் சேர்க்கும்படி வேண்டுகிறேன்.

                           
  உதயசூரியன் ரெத்தினம்.