புதியவை

Friday, December 7, 2018

சாதனங்களில் தவறு கிடையாது; பயன்படுத்தும் முறைதான் குற்றம்!

உலக மாற்றங்களுக்கு அமைய தற்கால மாணவர் சமூகமும் மாறி வருகின்றது. இந்த வகையில் அவரவர் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்றாற் போல், இலத்திரனியல் சாதனங்கள் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் கல்வியின் விருத்திக்கும் படிக்கற்களாக அமைந்திருக்கின்றன.

அதேவேளை, இவை இன்னொரு வகையில் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் முறையிலேயே வளர்ச்சியும் தடையும் ஏற்படுகின்றன.

சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தும்போது வளர்ச்சி ஏற்படுகிறது. தவறாகப் பயன்படுத்தும் போது அல்லது உரிய முறையில் பயன்படுத்தத் தவறும் போது வளர்ச்சிக்குப் பதிலாகத் தடையும் சீரழிவும் ஏற்படுகின்றன. இதனால், இந்தச் சாதனங்களில் தவறு கிடையாது. அவற்றைப் பயன்படுத்தும் நமது முறையில்தான் சரியும் தவறும் உள்ளது. இதை இன்னொரு வகையில் சொன்னால் கருவி முக்கியமானதல்ல... அதைக் கையாளும் முறையே முக்கியமானது என்று குறிப்பிடலாம்.

சிந்தனை வளர்ச்சியில் உருவாகிக் கொண்டிருக்கும் புதியனவற்றின் வருகையின் போதெல்லாம், எப்போதும் இத்தகைய ஒரு நேர்மறை – எதிர்மறை என்ற இருநிலைப்பட்ட போக்கு ஏற்படுவது இயல்பு. இதையே பொதுவாக “எங்கள் காலம் போல இந்தக் காலம் இல்லை” என்று மூத்தோர் சொல்வதுண்டு.

இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைமுறையும் தமக்குப் பின்வரும் இளைய தலைமுறையைப் பற்றியும் அவர்களுடைய புதிய காலத்தைப் பற்றியும் விமர்சனத்தை முன்வைப்பதுண்டு. இதற்குக் காரணம், இந்தப் புதிய சிந்தனையின் உருவாக்கங்கள் உண்டாக்கும் சமூக விளைவுகளேயாகும். இவற்றைச் சரியாகப் பயன்படுத்தும் சமூகங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றன. தவறாகப் பயன்படுத்தும் சமூகங்கள் வீழ்ச்சியடைகின்றன.

மனித வாழ்க்கை முன்னகர்ந்து செல்வதற்கான வழிகாட்டியாக இருப்பது நவீன யுகத்தின் முதன்மைச் சாதனமான ஊடகமே. இது தொடர்பாடல் யுகம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆகவே புதிய சாதனங்களை – புதிய ஊடகங்களைப் பயன்படுத்தாமல், அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் இன்றைய சமூகம் இயங்க முடியாது. எதிர்காலச் சமூகமும் வாழ முடியாது.

எனவே, நவீன யுகத்திற்கு ஏற்ப நாமும் எமது இளம் சந்ததியினரும் மாற வேண்டியது உலக ஒழுங்கின் நியதியாகும். இதற்கு ஏற்றாற் போல இளம் தலைமுறையினர் மாறி வந்தாலும் இந்த மாற்றமானது ஆரோக்கியமான கல்வி விருத்திக்கு வித்திட்டுள்ளதா என்ற கேள்வியும் உண்டு.

நவீன உலகை உள்ளங்கையில் அடக்கும் அளவிற்கு நவீன இலத்திரனியல் சாதனங்கள் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன. நவீன யுகத்தின் உருவாக்கமான இலத்திரனியல் ஊடகங்கள் எம்மை ஆட்கொண்டு அடக்கி ஆளும் அளவிற்கு அதன் வருகையும் பயன்பாடும் வியாபித்துக் காணப்படுகின்றன.

இதனால் இவை பெற்றோர், ஆசிரியர்கள், கல்விசார்துறையினருக்கு பெரும் சவாலாக வளர்ந்து உருவெடுத்துள்ளன. தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி, வானொலி, கையடக்கத் தொலைபேசி என்று வியத்தகு விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாகச் சில சந்தர்ப்பங்களில் அச்சமடைய வேண்டியுள்ளது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இவற்றைக் கையாளும் முறையினால் பாரிய பிரச்சினைகளே அதிகமாக உருவாகின்றன. ஆகவே இதற்குச் சரியான புரிதலும் முறையான வழிகாட்டலும் அவசியமாகிறது.

மாணவர்களின் கல்விக்கும் கற்றல் சூழலுக்கும் வாய்ப்ப்பாக விளங்கும் இலத்திர னியல் ஊடகங்கள் அவர்களுடைய கற்றலுக்கு படிக்கற்களாக அமைவதற்கு ஏற்றவாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அவற்றை அவ்வாறான நோக்கில் மாணவச் சமூகம் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்களைச் செய்வது அவசியம். இத்தகைய நெறிமுறை ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருந்தும்.

ஏனெனில் இந்தச் சாதனங்கள் அல்லது இவ்வாறான ஊடகங்கள் பல விடயங்களைக் கற்பதற்கும் தேடிப் பார்ப்பதற்கும் இன்னும் பல சௌகரியமான காரியங்களுக்கும் ஏணிப்படிகளாக அமைகின்றன. எனவே இவற்றின் பெறுமதியை நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியம்.

ஊடகங்களின் பயன்பாட்டை வளர்ச்சியடைந்த சமூகங்கள் முறைப்படி ஒழுங்கமைத்துள்ளன. இதன்படி அவை ஊடகமானது அல்லது இவ்வாறான சாதனங்களானவை முதலில் தகவலை வழங்குபவையாக இருக்க வேண்டும். அதாவது இவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக நாம் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது. இந்தத் தகவலின் வழியாக கற்றல் நிகழ வேண்டும். அதாவது அறிவுட்டல் நடக்க வேண்டும். மூன்றாவதே களிப்படைதலாகும். அதாவது பொழுது போக்குக்கும் மகிழ்ச்சிக்குமானது.

இதை நாம் வரிசைப்படுத்தினால் 1.Information, 2.Education, 3. Entertainment என வரும்.

ஆனால், இந்த அடிப்படையை நமது சமூகத்தினர் புரிந்து கொண்டு நடக்கின்றனரா? இன்று கல்வி அபிவிருத்தியில் பாரிய தாக்கத்தைச் செலுத்தி வருவது நவீன சாதனங்கள் என்ற ஒரு அபிப்பிராயம் பொதுவாக உண்டு. சில ஆய்வுகளும் சுயமதிப்பீடுகளும் கூட இதைக் கண்டறிந்துள்ளன. ஆகவேதான் நவீன சாதனங்கள் கல்வி விருத்தியில் பாரிய பாதிப்பைப் செலுத்தி தடைக்கல்லாக அமைந்து விட்டனவா என்பது பற்றி நோக்க வேண்டியுள்ளது.

விஞ்ஞானத்தின் விந்தை மிகு கண்டுபிடிப்புக்கள் பல தற்கால சமூகத்திற்கு பாரிய அளவிலான சாதகமான கைங்கரியங்களை ஆற்றுகின்றன. இதனடிப்படையில் கணினியின் வருகையானது 1944ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடைய தேவை அன்றைய காலத்தில் இராணுவத்தினரின் செயல்களுக்கே பெரிதும் பயன்படத்தக்க வகையில் அமைந்தது. ஆனால் காலவோட்டத்தில் இதன் பயன்பாடு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டதன் விளைவாக உலகெங்கும் அனைத்துச் செயற்பாடுகளிலும் இன்று செறிந்து காணப்படுகின்றது.

இவ்வாறானதே இணைய வலையமைப்புமாகும். இதன் மூலம் உலகத்தின் எந்த மூலைமுடுக்குகளிலும் நிகழும் செயல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் எமக்கு பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருப்பவர்களுக்கான தகவலை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்வதற்கும் இந்த ஊடகம் மிகவும் பயனுறுதி வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகிறது.

இதனால் வீட்டுக்கு வீடு சாதாரண பாவனைப் பொருட்களைப் போன்று அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருளாக கணினியும் இணையமும் மாறியது மட்டுமல்ல, நவநாகரிகமாகவும் மடிக்கணினி போன்ற சாதனங்களை வைத்திருப்பவர் உயர் தகுதி உடையவர், விடயப் புலமை உடையவர் என்றதொரு சமூகத்தின் பார்வையும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களின் கல்வி தொடர்பான விடயங்களையும் உலக நடப்புக்களையும் அறிந்து நவீன உலக ஒழுங்கிற்கு ஏற்றாற் போல வாழ வேண்டும் என்பதற்காக மடிக்கணினிகள் மாணவர்களின் கைகளில் சரளமாகக் காணப்படுகின்றன.

இதன் மூலம் மாணவன் யாருடைய உதவியும் இன்றி தானே தனித்து நின்று தன்னுடைய கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய அளவில் உற்ற நண்பனாக, நல்ல ஆசானாக கணினி விளங்குகிறது. இது எதிர்காலத்திற்கும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்றால் போல மாணவர் தம்மைப் புடம் போட்டுக் கொள்ள இலத்திரனியல் ஊடகம் பெரும்பங்காற்றுகின்றது. இதன் விளைவாக மாணவரின் கல்வி விருத்தியில் பாரிய செல்வாக்கினைச் செலுத்தி, மாணவருக்கு நவீன உலகின் ஊன்றுகோலாக, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு படிக்கற்களாகவே அமைந்து விடுகின்றது. கல்வியில் சிகரம் தொடுமளவிற்கு இந்த இலத்திரனியல் ஊடகம் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

மேலும், தொலைக்காட்சி என்ற இலத்திரனியல் கட்புல, செவிப்புல சாதனம் தொடக்கத்தில் வசதியுடையவர்களின் வீடுகளிலேயே காணப்பட்டது. வீடுகளிலே நிகழுகின்ற மங்களகரமான காரியங்களை வீடியோ மூலம் ஒளிப்பதிவு செய்து பார்ப்பதற்கும் பொழுதுபோக்கிற்குமாகவே எமது மக்கள் அதிகமாகப் பயன்படுத்தினர். அதனை ஒரு கற்றல் உபகரணமாகவோ, தொடர்பாடல் சாதனமாகவோ கொண்டது குறைவு. இப்போதும் இதுதான் நிலைமை. பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலேயே நமது தொலைக்காட்சிப் பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதாக உதவுவதில்லை.

ஆனால் வளர்ச்சியடைந்த பிற சமூகங்களில் வீட்டுக்கு வீடு நவீன வடிவமைப்புக்களைக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் மாணவரின் கல்வி விருத்தியில் உதவும்பொருளாக செய்திகள், கற்றல் முறையிலான வீடியோக்கள் எனச் சிறந்த சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவரின் கல்வி விருத்தியடைவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது. இவ்வாறு நாமும் பயன்படுத்தினால் எமது சூழலும் முன்னேற்றமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதனால் தொலைக்காட்சியானது மாணவரின் கல்வி விருத்திக்கு படிக்கல்லாகவே படைக்கப்பட்டது. அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் போது நிச்சயமாக நன்மை கிட்டும்.

அடுத்து தற்காலத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை உலக மக்களின் எண்ணிக்கையில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் ஸ்மாட் போன், சாதாரணபோன் எனத் தனியான தேவை அலுவலகத்தேவை என்று பயன் படுத்துகின்றனர். ஆனால், வயதில் மிகச் சிறிய ஐந்து ஆறு வயதுப் பிள்ளைகள் கூட கைத்தொலைபேசியைக் கையாளும் நிலை உருவாகியுள்ளது. இது தவறான வழிகளுக்கும் கவனச் சிதைவுக்கும் வழியேற்படுத்துகிறது. மாணவர்களுக்கும் ஒரு எல்லைவரையில் கைத்தொலைபேசி சாத்தியங்களை வழங்குகின்றது. ஆனால், இது குறித்த சரியான புரிதலும் தெளிவான விளக்கமும் இல்லாத காரணத்தினால். மாணவர்கள் இதைத் தவறான முறையில் பயன்படுத்துவதே கூடுதலாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவர்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் வேண்டியவருடன் தேவையான தகவலைப் பெற்றுக் கொள்வதற்கு கையடக்கத் தொலைபேசிகள் பெரிதும் உறுதுணையாக அமைகின்றன. அதுவும் ஸ்மாட்போன் தற்கால மாணவருக்குத் தேவையான அளவுக்குத் தகவல் மூலங்களை வழங்குகின்றது. இதன் மூலம் நூலகம் சென்று வருவதற்கான நேரமோ நூல்களைத் தேடுதல், புரட்டுதல் போன்ற சிரமங்கள் எல்லாம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளன.